அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்! ரணிலுக்கு நன்றி தெரிவித்த கனேடிய அமைப்பு
கனடாவில் இருந்து இயங்கி வரும் நீதி மற்றும் சமத்துவத்துக்கான அமைப்பு அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த 21.8.2022 அன்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் நீதி மற்றும் சமத்துவத்துக்கான கனடிய அமைப்பு பிரதிநிதிகளுடானான இனணயவழி கலந்துரையாடலின் போது பல வருட காலங்களாக சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றதை அடுத்து அவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் தீபாவளி தினத்தன்று 8 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அனைத்து அரசியல் கைதிகளுக்கும் கோரிக்கை
குறிப்பாக கடந்த 20 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ரகுபதி சர்மாவை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டதுடன் மிகுதமாக உள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
தங்களது கோரிக்கையினை ஏற்று, உறுதிமொழி வழங்கி இவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கையினை எடுத்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இருவருக்கும் விசேட நன்றியை தெரிவித்துக் தெரிவித்துக்கொள்வதோடு கடந்த 1 வருடங்களிற்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனைய அரசியற் கைதிகளையும் உடன் விடுவிக்குமாறும் மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.
நாமும் இவர்களது விடுதலைக்கு தொடர்ந்து அயராது செயற்படுவோம் என உறுதியளிக்கின்றோமென நீதி மற்றும் சமத்துவத்துக்கான கனடா அமைப்பின் பணிப்பாளர் ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்