யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி
புதிய இணைப்பு
யாழில் எதிர்வரும் 3 வருடங்களில் சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாளை (01) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்காக இவ்வாறு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
தொடர்ந்து, யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டைதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை (02) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
