ரஷ்யாவிலுள்ள பிரான்ஸ் நிறுவனங்களுக்கு உக்ரைன் அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்!
ரஷ்யாவிலிருந்து பிரான்ஸ் நிறுவனங்களை வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“பிரான்ஸ் நிறுவனங்கள் இன்னும் ரஷ்யாவில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, ரெனால்ட், ஆச்சான், லெராய் மெர்லின் மற்றும் பல நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும்.
எல்லோரும் பார்த்த முதலாம் உலகப் போரின் புகைப்படங்களில் உள்ள வெர்டூனின் பேரழிவை, உக்ரைனிலுள்ள மரியுபோல் போன்ற பேரழிவிற்குள்ளான நகரங்களின் படங்கள் நினைவுபடுத்துகின்றன.
ரஷ்ய இராணுவம் இலக்குகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
போர்க்குற்றங்கள் பற்றிய கருத்துகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அத்துடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
