764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்து சேவை - வடக்கு ஆளுநரின் அறிவிப்பு
புதிய இணைப்பு
764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை (KKS) தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதி காவல்துறைமா அதிபருக்கு தொலைபேசியூடாக ஆளுநர் அறிவுறுத்தினார்.
இரண்டாம் இணைப்பு
யாழில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் போராட்ட இடத்திற்கு வருமாறு கோரி சாரதிகள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இறுதியாக காவல்துறையினர் தலையிட்டு வழமை போன்று சேவையில் ஈடுபடுமாறு கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில், வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை (Point Pedro) - பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால் வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தி இருந்தன.
அதனால் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி, யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்படும் 769 வழித்தட பேருந்துகள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டது.
வழித்தட அனுமதியில் சேவை
தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை அடைந்து அதனூடாக காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுகிறது.
அதே போன்று காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைகிறது.
இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பேருந்து சேவை
கடந்த மாதம் 30 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் தனியார் பேருந்து சேவை வழித்தடம் தொடர்பான கூட்டம் இடம்பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எனவே குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் போராட்ட இடத்திற்கு வருமாறுகோரி சாரதிகள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

