மாகாண சபை தேர்தல் உண்மைத்தன்மையில் எழுந்துள்ள கேள்வி நிலை!
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்று யாழில் சந்தித்து பேசிய நிலையில் குறித்த விடயத்தை சுமந்திரன் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ''அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம்.
மக்களுடைய அபிலாசை
அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை. பிரதம மந்திரி, நீதி அமைச்சர் உள்ளிட்டோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.
இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.
தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது.
பலர் அரசாங்கம் சாட்டுப் போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு நேரடியாகவும் இதுதான் தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையிலும் ஏற்கனவே பல வரைவுகள் யோசனைகள் ஆவணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன் வைப்பதற்கான ஒரு முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கிறோம்.
ஆகவே வெகுவிரைவில் அதனை பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள் நிலைப்பாடுகள் தெரியப்படுத்தினால் நல்லது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |