மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
காலத்தை பின்னடித்து செல்லாமல் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதியில் நேற்று (18) இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் 2026 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
கட்சியிபை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. வருகின்ற மாதம் கட்சியின் மாநாட்டை கூட்டுவதற்கும் தீர்மானித்துள்ளோம். அத்துடன், காலத்தை பின்னடித்து செல்லாமல் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்பது எங்களது ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது.
தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தமிழ் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பின்னடிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரை பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். அது தமிழ் மக்களது தேவையாகவும் கோரிக்கையாகவும் உளளது. இது தொடர்பாக மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பும் சிஙகள கட்சிகள் என்பனவும் வலியுறுத்தி வருகின்றன.
அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருமாக இருந்தால் அந்த புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக எனன விடயங்கள் உள்ளடக்கப் போகின்றார்கள் என்பதை தமிழர் தரப்புடன் அவர்கள் பேச வேண்டும். தமிழர் தரப்பு அதற்கான ஒரு பொது முடிவுக்கு வர வேண்டும்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி போன்றன ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். தீர்வு பொதுவிடயம், தமிழ் மக்களது நலன் சார்ந்த விடயம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒத்துவரக் கூடிய ஒரு தீர்வு திட்டத்தை முன் வைக்க வேண்டும்.
பல தீர்வுத் திட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும் கூட நாங்கள் ஒருமுகப்படுத்தி சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்ற தேவை உள்ளது. எல்லோரும் இணைந்து அதனை முன்வைக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம்
மேலும், பயங்கரவாத தடைச்சட்டம் முற்று முழதாக நீக்கப்பட வேண்டும். தற்போது புதிய வடிவத்தில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வருகின்றது. இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் எல்லோரும் அதனை நிராகரித்துள்ளார்கள். சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் கூட அதனை நிராகரித்துள்ளது.
இலங்கையின சட்டத்தில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். சாதாரண குற்றங்களுக்கு இருக்கின்ற சட்டங்கள் இருக்கின்றது. அதனை பயன்படுத்த முடியும்.

தற்போதைய அரசாங்கம் பிரஜா சக்தி என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது கட்சியினுடைய ஒரு பிரதிநிதியை நியமிக்கும் நிலையை பார்க்கின்றோம். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் அதனை நாங்கள் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் பல உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அதனைத் தாண்டி பிரஜா சக்தி என்ற பெயரில் தமது கட்சி சார்ந்தவரை நியமிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். அவர் யாருக்கு கட்டுப்பட்டவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு கீழு உள்ளார்.
அவர் பிரதே செயலாளர் உட்பட யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல. உண்மையாகவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரம் கட்டி தாம் நியமித்த உறுப்பினர்கள் ஊடாக வேலை செய்வது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு. அது நிறுத்தப்பட வேண்டும்.
அவருக்குரிய தகமை என்ன, இது சட்டவிரோத செயற்பாடு. அது நிறுத்தப்பட வேண்டும். தொடர்ந்தும் தமிழ் தரப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தீர்மானித்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |