இன முரண்பாடு பேரினவாதத்தை தூண்டுவது சிறிலங்கா இராணுவமே - அங்கஜன் பகிரங்க கருத்து!
சிறிலங்காவில் எந்த தரப்பினர் ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா இராணுவத்தின் கருத்துக்களுக்கு செவி சாய்க்க வேண்டிய தேவை உள்ளது.
ஆகவே தற்போது இன முரண்பாடு, முறுகல் மற்றும் பேரினவாதம் என்பவற்றை சிறிலங்கா இராணுவமே தூண்டுகின்றது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஒரே கொள்கை ஒரே முகத்துடன் தான் ஆட்சியமைக்கிறார்கள். ஆகவே அதனை மாற்ற வேண்டும் என்பதற்காகவே தான் நான் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய கட்டடம்
ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை தையிட்டியில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், தையிட்டி விகாரை என்பது அத்துமீறி சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஒரு பௌத்த விகாரை தான்.
இது அரசாங்கத்தின் காணியும் அல்ல, தனியாருடையது, பொதுமக்களின் காணிகள் 29 பேருடைய காணியை ஆக்கிரமித்தே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது.
தற்போது உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இந்த காணிகள் இருப்பதானாலேயே இவ்வாறு அத்துமீறி சட்டத்திற்கு புறம்பாக விகாரை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
அதனைத் தாண்டி இன,மத முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
