எதையும் மாற்ற தயார் இல்லை...ஐம்.எம்.எப் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் எந்தவொரு உடன்படிக்கையையும் மாற்றத் தயாராக இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி பொது சந்தையில் இன்று (15) இடம்பெற்ற இயலும் சிறிலங்கா பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அதிகாரத்தின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்தியதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, தற்போது புரட்சியை முன்னெடுப்பதற்கே மக்கள் ஆணையை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏழை வர்க்கம்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இன்று ஜனாதிபதி பதவிக்கு ஆணை கேட்பவர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களை வாழ வைக்க முன்வராமல் ஓடியவர்களே. மக்களை வாழவைக்க வேண்டும் என்றால் ஏன் அப்போது நாட்டைக் கைப்பற்றவில்லை?
நாட்டின் அரசியல்வாதிகள் ஏழை வர்க்கத்தை கைவிட்டு விட்டதாக அநுர குமார கூறுகிறார். ஏழை வர்க்கத்தின் மீது இவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் அப்போது அவர்கள் நாட்டை ஏற்கவில்லை?
நான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது, நான் பதவி விலகுபவன் இல்லை என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் அவர்களைப் போல காலணி அணிந்து ஓட்டப்பந்தயம் ஓடுகிறவன் அல்ல என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார சீர்திருத்தங்கள்
அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.சஜித் பிரேமதாசவிற்கும் அழைப்பு விடுக்கிறேன்.அப்போது ஓடாமல் இருக்க கற்றுக்கொடுக்க முடியும்.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களும் அவ்வாறே நடைமுறைபடுத்த வேண்டுமென நிதியம் வலியுறுத்தியுள்ளது.யார் ஆட்சிக்கு வந்தாலும் சீர்திருத்த திட்டத்தை மாற்றப்போவதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
அநுரகுமார என்னை விவாதத்திற்கு அழைக்கிறார், நான் இந்த விவாதத்திற்கு தயார் என்று கூறியுள்ளேன், ஆனால் இன்னும் திகதி அறிவிக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |