பதில் அதிபராக சிறிலங்கா ஆயுத படைகளுக்கு ரணில் பிறப்பித்த முதலாவது அதிரடி உத்தரவு!
ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப் படைகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ரணில் விரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பதில் அதிபராக இது ரணில் வெளியிட்ட அறிக்கையாகும். குறித்த அறிக்கையில்,
"சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தி நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக, பதில் அதிபரான நானும், சபாநாயகரும் தற்போது செயற்பட்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சில நபர்களும் அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு மாலைதீவு புறப்பட்டுச் சென்றார். அதனை எனக்கும், சபாநாயகருக்கும் அறிவித்தார். அதிபர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்த பிறகு, வாக்களிப்பு மூலம் அதிபரை தெரிவு செய்ய முடியும்.
இன்றைய ஆர்பாட்டக்காரர்கள் பல திட்டங்களை வகுத்திருந்தனர். அவற்றை புலனாய்வு அமைப்புகள் மூலம் தெரிந்து கொண்டோம். பிரதமர் அலுவலகம், வான்படை தளபதியின் இல்லம், கடற்படை தளபதி இல்லம், நாடாளுமன்றம் என அனைத்தையும் முற்றுகையிட தயாராகி இருந்தனர்.
பிரதமர் அலுவலகத்துக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சபாநாயகரின் முடிவினால் தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதை நிறுத்த முடிந்தது.
இந்த இடங்களை கைப்பற்றி நாட்டின் அதிகாரத்தை பலப்படுத்தி, அவர்கள் விரும்பும் ஒருவரை நியமிக்க முயற்சிக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் பயனற்றது என்று சிலர் கூறுகிறார்கள். அரசியல் சாசனத்துக்கு புறம்பாக செயல்பட முயற்சிக்கின்றனர். அதனை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கவும் மற்றும் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலின்படி தீர்மானித்துள்ளேன்.
இது உங்கள் குழந்தைகளின், நாட்டு மக்களின் எதிர்காலம். இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும். இந்த பாசிச அச்சுறுத்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்" என ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
