இலங்கையருக்கு கிடைத்த உயரிய விருது (படம்)
இலங்கையருக்கு லீனியன் பதக்கம்
இயற்கை விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசு என அறியப்படும் “லீனியன் பதக்கம்” இம்முறை இலங்கை ஆராய்ச்சியாளரும் இயற்கை விஞ்ஞானியுமான கலாநிதி ரொஹான் பெதியாகொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள லீனியன் கழகத்தின் ஊடாக உலகம் முழுவதும் இருக்கும் சிறப்பு தாவரவியல் விஞ்ஞானிகள் மற்றும் விலங்கியல் விஞ்ஞானிகளுக்காக கடந்த 1888 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் இந்தப் பதக்கம் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளமை இதுவே முதல் முறை.
அத்துடன் இந்தப் பதக்கத்தை பெற்ற கலாநிதி ரொஹான் பெதியாகொட ஆசியாவில் இரண்டாவது ஆராய்ச்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலாநிதி ரொஹான் பெதியாகொட
விஞ்ஞானி மட்டுமல்லாது கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளரான பெதியாகொட, சர்வதேச சிவப்பு புள்ளிவிபரக் குழுவின் பிரதித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இலங்கை சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவு, நீர் வளங்கள் சபை ஆகியவற்றில் பணியாற்றியுள்ள பெதியாகொட, இலங்கை தேயிலை சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் நன்னீர் மீன் வளங்கள் சம்பந்தமாக சிறப்பு ஆய்வை மேற்கொண்டுள்ள அவர், உலக வங்கி உட்பட பல நிறுவனங்களுக்காக பல்லுயிர்கள் தொடர்பான பல ஆய்வு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையில் பல்லுயிர் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு அவர் செய்துள்ள சேவை, அவற்றின் பிரதிபலன்களை கவனத்தில் கொண்டு இந்த லீனியன் பதக்கத்தை அவருக்கு வழங்கியுள்ளதாக விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது.
லண்டனில் இயங்கும் லீனியன் கழகம் உலகில் தற்போது செயற்பட்டு வரும் இயற்கை வரலாற்றை ஆய்வு செய்து வரும் மிகப் பழமையான கழகமாகும். சுவீடன் நாட்டின் தேசிய இயற்கை விஞ்ஞானியான கால் லினேயஸ் (1707-1778) நினைவு கூரும் வகையில் லீனியன் கழகம் பெயரிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
