போரில் ஈடுபட்ட விமானியை கறுப்புபட்டியலில் சேர்த்தது அரசாங்கம்
இலங்கையில் இடம்பெற்ற போரில் எம்.ஐ உலங்கு வானூர்தியின் தாக்குதல் விமானியாக பணிபுரிந்த ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா, அரசாங்கத்தால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹர்ஷன நாணயக்கார,
தேசிய மக்கள் சக்தியில் இராணுவ சமுகம்
தேசிய மக்கள் சக்தி அண்மையில் தனது கட்சியின் கீழ் முன்னாள் இராணுவ சமூகமொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். இதில் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவும் இணைந்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் விமானப்படையால் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை தெரிவு செய்வது அவரது அடிப்படை உரிமை என தெரிவித்த ஹர்ஷன நாணயக்கார, சம்பத் துயகொண்டா எந்த காரணத்திற்காக கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் எந்த குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் கேள்வி எழுப்பினார்.
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை
ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை கறுப்புப் பட்டியலில் சேர்த்தமைக்கு எதிராக நீதிமன்றத்திலும் ரிட் விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
