மக்களுக்கு அதிர்ச்சி தகவல் - மீண்டும் அதிகரிக்கும் அரிசி விலை
அரிசி விலை மேலும் அதிகரிக்கும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் கூலித் தொழில் செய்யும் மக்கள் அரிசி வாங்குவதற்கு கூட பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவலாக எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அரிசி விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுக பாதுகாப்பு வரி
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமுக பாதுகாப்பு வரி அறிவிடப்படுவதே இந்த விலை உயர்வுக்கு காரணமென அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே அரிசி விலை உயர்வைத் தடுப்பதற்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசிக்கான வரித் தொகையை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி
இலங்கையில் அரிசி உபரியாக இருக்கும் போதும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2020/21 பருவத்தில் ஐந்து மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இயற்கை விவசாயத்தின் காரணமாக அரிசி அறுவடை இல்லாததால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தையில் தற்போது அரிசி விலைகள் பெருமளவில் உயர்ந்தே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.