காலநிலை மாற்றத்தால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : மாற்று நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு
நாட்டில் நிலவிவருகின்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாக நிலவி வந்த கடும் வறட்சியின் விளைவாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்தது.
உணவுப் பயிர்த் திட்டம்
தற்போது அதற்கு மாறாக நாட்டின் பல மாகாணங்களில் பெய்து வரும் கன மழையினால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது, என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தாழ்நிலப்பகுதிகளின் மரக்கறிப் பயிர்களும் மழையினால் அழிந்துள்ளன, அதேபோல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 15,000 ஏக்கர் பச்சைப்பயறும் முற்றாக அழிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் மொத்த பச்சைப்பயறுக்கான தேவையில் 40 வீதமான பயிர்ச்செய்கை இதன் மூலம் பெற்றுக்கொள்ளபட இருந்ததாகவும், இப்போது அது முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு, தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடுவதற்கான திட்டத்தையும், இந்தப் பருவத்திற்குரிய உணவுப் பயிர்த் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு, அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், வானிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள உணவுப் பயிர் சேதம் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்கும் படியும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
