சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல்: காவல்துறையினர் அளித்த வாக்குறுதி
திருகோணமலை (Trincomalee) சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இம்முறை நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச உயர் மட்டத்தினால் நாடு தழுவிய ரீதியில் ஏதேனும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்படாதவிடத்து எவ்விதமான தடைகளும் விதிக்கப்பட மாட்டாது என காவல்துறையினர் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இம்முறை நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டரீதியான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் (08) சம்பூரில் நடைபெற்ற போது காவல்துறையினர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர்.
நீதி மன்றத் தடையுத்தரவு
கடந்த வருடம் வடகிழக்கில் நீதி மன்றத் தடையுத்தரவின் மூலமாக தடைசெய்யப்பட்டிருந்த பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது.
இதனால் இம்முறை அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலும் உரிய சட்ட ஆலோசனைகளைப் பின்பற்றி அமைதியாக நினைவேந்தலைச் செய்வதற்கான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமையவும் நாட்டில் நடைமுறையில உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கமையவும் தேசியப்பாதுகாப்பிற்கு குந்தகமின்றியும் காவல் உள்ளடங்கலான முப்படையினரதும் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலும் செயற்படுவதற்கான இணக்கப்பாடு காணப்பட்டது.
காவல்துறையினர் உறுதி
அரச உயர் மட்டத்தினால் நாடு தழுவிய ரீதியில் ஏதேனும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்படாதவிடத்து எவ்விதமான தடைகளும் விதிக்கப்பட மாட்டாது எனவும் காவல்துறையினர் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே அநாவசியமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட சின்னங்களைத் தவிர்த்து குறித்த நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அனைத்துப் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்ணணுமென சம்பூர் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சந்திப்பில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரும் சம்பூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |