சாணக்கியனை தரக்குறைவாக விமர்சித்த சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை மறைமுகமாக நாய் என விமர்சித்த வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி, வெளிநாட்டிலுள்ள பிரிவினைவாத சக்திகளின் முகவராக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு வீடொன்றை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடக செய்தியொன்றை மேற்கோள்காட்டி இரா.சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இன்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு பிரிவினைவாத சக்தி
மேலும் பதில் வழங்கிய அவர், “வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளுக்கு கூலிக்காக வேலை செய்யும் ஒருவர் இந்த நாடாளுமன்றத்திற்குள் இருக்கின்றார். இராசமாணிக்கம் என்ற குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டு மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகவும் விரும்பமற்ற ஒருவராக காணப்படுகின்றார்.
இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து சென்று, எப்போதும் அரசியல் செய்வதற்கே அவர் விரும்புகின்றார். யாரேனும் அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்கின்ற போது, அதற்கு அவர் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுகின்றார்.
இனப் பிரச்சினை தீர்விற்காக பணிகளை நாம் மேற்கொள்ளும் போது எமது நற்பெயரை அழிப்பதற்கு அவரின் சர்வதேச முகவர்கள், பிரிவினைவாத சக்திகள் ஆலோசனை வழங்குகின்றனர். அவர் கூலிக்கு மாரடிக்கும் ஒருவர். அவர்களுக்காக அவர் குரல்கொடுகின்றார். நேற்றும் குரல்கொடுத்தார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு நான் வீடொன்றை கொடுத்ததாக அவர் கூறியதாக இன்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எனக்கு வீடொன்றை வழங்க முடியுமா? வீடு வழங்குவதற்கு நான் யார்? அரசியலை ஒரு தொழிலாக தெரிவுசெய்து நான் வந்தவன் அல்ல. நான் வரி செலுத்தி கட்டிய வீடு எனக்கு உள்ளது. அந்த வீட்டிலேயே நான் வாழ்கின்றேன். ஒருநாள் கூட அரச வீட்டில் வாழ்ந்ததில்லை.
சில வேளைகளில் வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் அதிகாரிகள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கான விருந்தோம்பல்களுக்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் பயன்படுத்திய வீட்டை மாத்திரமே நான் பயன்படுத்தியுள்ளேன்.
நான் வசித்த வீட்டை நான் யாருக்கும் வழங்கவில்லை. அதற்கான உரிமையும் எனக்கு இல்லை. நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி இவ்வாறு ஐந்து சதத்திற்கு பெறாத கதையை கூற முடியாது.
அனைத்து மனிதர்களுக்கும் கண்ணியம் ஒன்று உள்ளது. வேறு நாடுகளில் இருந்து இலங்கையை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல் கொண்ட, பிரிவினைவாதத்தை புத்துயிர் பெற வைக்க முயலும் உங்களை இயங்குபவர்களிடம் இருந்தே உங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் அனைத்தையும் இழந்த மற்றுமொரு இலங்கை தலைமுறையை தவறாக வழிநடத்தும் வகையில் குறிப்பிட்ட ஒருவர் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்துவது நியாயமானது அல்ல.
குரைக்கும் நாய்க்கு கல் எறிய மாட்டேன்
நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் அவர் போட்டியிட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை வகித்து, இந்த நாட்டில் அமைதியை கொண்டுவந்த கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்திருந்தார்.
அவரால் இந்தச் சபையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நான் அதிருப்தி அடைகின்றேன். எனது தந்தையார் அப்போது வின்ஸ்ரன் சேர்ச்சிலை மேற்கோள்காட்டி, ஒரு விடயத்தை கூறுவார்.
இரண்டு பக்கமும் குரைக்கும் நாய்க்கு மீண்டும் மீண்டும் கல் எறியச் சென்றதால், ஒருபோதும் தமது பயணத்தை தொடர முடியாது என கூறுவார். இதற்கு பின்னர் குரைக்கும் நாய்க்கு நான் கல் எறிய செல்ல மாட்டேன். எனும் உண்மையான விடயத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பொய்களை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது.யார் அதற்கு அனுமதி வழங்கியது. எனக்கு அரச வீடொன்றை யாருக்கேனும் வழங்க முடியுமா? அந்த வீட்டை பெற்றுக்கொடுத்தவர்களிடம் கேட்க வேண்டும்.
இரா.சாணக்கியன் கூறிய கருத்து தொடர்பில் எனது முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றேன். எனினும் ஒன்றைக் கூற வேண்டும். எமது பயணத்தை நாம் தொடர்வோம்.
இந்த நாட்டு மக்கள் மத்தியில் அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய அனைத்து விடயங்களையும் நாம் செய்வோம்.
பிரிவினைவாத சக்திகளின் முகவர்களால் மேற்கொள்ளும் பொய்யான அவமதிப்புகளால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” - என்றார்.
