வீரவசனம் பேசி திரியும் ஊழல்வாதிகள் : அநுரவை கடுமையாக சாடிய முன்னாள் எம்.பி
கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா(Sarath Fonseka) கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள், மக்களை வதைத்தவர்கள் மற்றும் மக்களைப் படுகொலை செய்தவர்கள் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்டாலும் அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.
அவர்களுக்கு எதிராக அநுர அரசு ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை?
நடவடிக்கை எடுக்கவில்லை
வாக்குமூலம் என்ற பெயரில் ஒருசிலர் மாத்திரம் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களும் வெளியில் வந்து வீரவசனம் பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.
ஊழல், மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், மோசடியாளர்களையும், கொலையாளிகளையும் சிறையில் அடைப்போம் என்று தேர்தல் காலங்களில் மக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த அநுர தரப்பினர், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
அவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |