முன்னேறும் தேசிய மக்கள் சக்தி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய சரத் பொன்சேகா
நாட்டில் கட்சிசாரா வாக்குகளில் 30 வீதம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்குச் சென்றடைந்துள்ளதாகவும் அது பாரிய மாற்றம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “ஜே.வி.பியில் முன்னர் ஐந்து இலட்சம் பேர் இருந்தாலும் அக்கட்சியில் ஒழுக்கக் கட்டுப்பாடு இருந்தது, கூட்டங்களின்போது கூட இராணுவக் கட்டமைப்பு போல் ஒழுக்கம் பேணப்பட்டு வந்தது.
கட்சிசாரா வாக்குகள்
ஆனால், ஜே.வி.பி. தற்போது தேசிய மக்கள் சக்தியாகியுள்ளது, அந்தக் கூட்டணியில் இணைபவர்கள் எல்லாம் முன்னைய ஜே.வி.பியினர் போல் செயற்படுவார்கள் எனக் கூற முடியாது.
மொட்டுக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்திக்கு வருவதற்கு வெட்கப்பட்டவர்கள் கூட தேசிய மக்கள் சக்திக்குள் சென்றுள்ளனர்.
கட்சிசாரா வாக்குகளில் 30 வீதம் அவர்களுக்குச் சென்றுள்ளது, இளைஞர்களின் வாக்குகளிலும் சிறு வீதம் சென்றுள்ளது.
பாரிய மாற்றம்
முன்னர் 5 இலட்சம் என்றால் தற்போது 20 இலட்சம். இது பாரிய மாற்றம் என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
மறுபுறத்தில் அன்றைய ஜே.வி.பியில் இருந்த ஒழுக்கத்தை இன்று பேண முடியாது.
நாட்டை ஆள்வதென்பதும் நகைப்புக்குரிய காரணம் அல்ல, அதற்கு அனுபவம் இருக்க வேண்டும், அந்த இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி வந்துள்ளதா என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |