புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு சிறிய உதவு தொகையை அரசு வழங்கும் செயற்திட்டமேயாகும்.
ஆனால் இப்போது அந்த புலமைப்பரிசில் பரீட்சையானது அரசாங்க உத்தியோகத்தர்கள் முதல் சாதாரண பாமரன் வரையான பெற்றோருக்கான போட்டிப்பரீட்சையாக மாற்றம் பெற்றுவிட்டதுதான் துரதிஷ்டம்.
அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள்
இதில் அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைந்தால் அவர்களுக்கு எதுவித கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.அப்படியென்றால் அந்தப்பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றி என்ன பயன்?அரசாங்கம் இதற்காக ஒரு திட்டம் கொண்டு வந்தால் நல்லது. அது என்னவெனில் அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்தப்பரீட்சையில் தோற்றுவதற்கு தடை விதிப்பதாகும்.
சரி பெற்றோர்தான் போட்டி என்றால் இப்பொழுது பாடசாலைகளும் வலய மட்டத்தில் தாம் எத்தனையாவது இடம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.
உண்மையில் இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கோ அல்லது பாடசாலைக்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை. அப்படியென்றால் அரசாங்கம் இதை ஏன் நடத்துகின்றது.
பாடசாலை கூடிய பெறுபேற்றை பெறவேண்டும் என
தமது பாடசாலை கூடிய பெறுபேற்றை பெறவேண்டும் என பாடசாலைகள் பிள்ளைகளுக்கு செய்யும் அநீதி இருக்கே அதைத்தான் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.
இப்போது அடுத்தகட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவிட்டன பாடசாலைகள்.
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்று அது.அங்கு ஆண்டு ஒன்றுமுதல் நான்காம் ஆண்டு வரை மூன்று வகுப்புக்கள் உள்ளன. ஆனால் அந்தப்பாடசாலையில் நான்காம் ஆண்டின் இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கும் ஆசிரியர் என தெரிவிக்கும் நபரிடம் கற்பதற்கு மூன்று பிரிவு மாணவர்களுக்கும் சேர்த்து பரீட்சை வைக்கப்படும் அதில் அவர்கள் நிர்ணயிக்கும் புள்ளிகளை பெறும் மாணவர்கள் தான் ஏ வகுப்பு என பிரிக்கப்பட்டு அந்த ஆசிரியரிடம் செல்வார்கள் மிகுதி மாணவர்கள் பி, சி என பிரிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.
80 மாணவர்களதும் எதிர்காலத்தை பாடசாலையே தீர்மானிக்கிறது
இதில் துயரம் என்வெனில் மூன்று வகுப்புக்களையும் சேர்த்து 120 பிள்ளைகள் இருந்தால் அந்த ஆசிரியரிடம் செல்லும் 40 மாணவர்களை தவிர மிகுதி 80 மாணவர்களதும் எதிர்காலத்தை பாடசாலையே தீர்மானிக்கிறது. அதாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் தொடர்ந்து ஏ வகுப்பில் கற்க மிகுதி 80 மாணவர்களும் தொடர்ந்தும் பி,சி வகுப்பிலேயே இருப்பார்கள். இது ஏன் என்றால் பாடசாலையின் பெறுபேற்றை கூட்டிக்காட்ட எடுக்கும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும்.
இதற்கு வலயக்கல்விப்பணிமனைகளும் மறைமுகமாக துணைபோவதுதான் துயரத்திலும் மேல் துயரம்.
அனைத்து பிள்ளைகளும் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்பதற்காகவே வெள்ளை சீருடையை அரசாங்கம் அறிமுகம் செய்தது.ஆனால் அந்த வெள்ளை சீருடைக்குள்ளும் கல்விமான்கள் புகுந்து தமதும் தமது பாடசாலையினதும் பெறுபேற்றை உயர்த்திக்காட்ட பிள்ளைகளை பலிக்கடாவாக்குவதுதான் வேதனையிலும் வேதனை்.
பிஞ்சு உள்ளங்களில் நச்சு விதையை பாடசாலைகளே விதிப்பது நியாயமா? இதற்கு கடிவாளம் இடுவது யார்?
