கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி
தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சி
ரூபா 20 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த சிஷே்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார்.
இந்திய பிரஜை கையளித்த தங்கம்
துபாயில் இருந்து இன்று காலை விமான நிலைத்தில் தரையிறங்கிய இந்திய பிரஜை ஒருவர் இந்த தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ட்ரான்ஸ்சிட் பயணிகள் முனையத்தில் வைத்து, இந்த பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கி இருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தங்க பிஸ்கட்டுக்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டை பைகளில் மறைத்து விமான நிலையத்தின் சுங்க விசாரணைப் பிரிவினை கடந்து செல்ல முயற்சித்த போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
