எனக்கும் சஹ்ரானுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: ஆமி முஹைதீன் பகிரங்கம்
எனக்கும் சஹ்ரானுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் பொய்யாக வழக்கு பதிவு செய்தே என்னை சிறையிட்டனர் என்றும் ஆமி முஹைதீன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "இராணுவத்தில் இருந்து விலகிய பிறகு பொதுமக்கள் மீதான அக்கரையில் மக்கள் மேம்பட்டு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினேன்.
2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலிலும் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டேன்.
என்மீது அக்காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. அதன் பிறகு 2019 நான்காம் மாதம் சஹ்ரானுடைய குண்டு வெடிப்பில் என்னை கைது செய்தனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் என்னால் முன்னெடுக்கப்பட்டது என குற்றம் சுமத்தி குற்றப்புலனாய்வு பிரிவினரால் 5 மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
அதன் பிறகு மாவனல்லை சிலையுடைப்பு பிரச்சினையில் என்னைக் கைது செய்து கேகாலை சிசைச்சாலையில் 3 வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
இவ்வாறான பொய் குற்றங்களில் என்னை கைது செய்தனர். அதன் பிறகு என்னை குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தாலும் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை."என தெரிவித்தார்.
இதன் போது சமூகம் தன்மீது காட்டுகின்ற வேறுபாட்டை வெளிப்படுத்தி அவர் கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.
