முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை எதிர்கொள்கிறோம் : ஹமாஸ் தலைவர் வெளிப்படை
முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாயா சின்வர் என கூறப்படுகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதிப் பிறகு முதன்முறையாக இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸின் ராணுவப் பிரிவு
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம், கடுமையான, முன் எப்போதுமில்லாத போரை எதிர்கொள்கிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையை நசுக்கும் பாதையில் அல் கஸ்ஸாம் உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களிடம் ஹமாஸ் ஒருபோதும் அடிபணியாது.
இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை நாங்கள் குறிவைத்தோம்.
அவர்களில், 1,500-க்கும் மேற்பட்டோரை நாங்கள் கொன்றுள்ளோம். எங்கள் தாக்குதலில் 3,500-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
750 இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அல் கஸ்ஸாம் அழித்துள்ளது.” என்றார்.
மிகைப்படுத்தப்பட்ட தரவுகள்
இந்நிலையில், யாயா சின்வரின் இந்த தரவுகளை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் அல் கஸ்ஸாம் கடுமையான அழுத்தங்களை சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாகவே தங்கள் படையினரை ஊக்கப்படுத்தும் நோக்கில் மிகைப்படுத்தப்பட்ட தரவுகளை யாயா சின்வர் கூறி இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |