சுதந்திர தினத்திற்கு முன்னதாக தமிழர் பகுதிகளில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்!
தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இலங்கை அதிபருடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் உறுதியளிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக குறித்த காணிகள் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு - அதிபர்
அதிபர் ரணில் தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு யாழ்ப்பாணம் வந்தபோது, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள 108 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இணங்கியிருந்தார்.
இந்தநிலையில், காணி விடுவிப்பு தொடர்பான ஆய்வுகளை பரிசீலனை செய்வதற்கு அதிபர் செயலக பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த 108 ஏக்கர் காணியில் பலாலி அன்ரனிபுரத்திலுள்ள 13 ஏக்கர் காணியும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளதுடன், நிலஅளவைத் திணைக்களம் குறித்த காணியை அளவிடும் பணியை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது.