அடிப்படை மனித உரிமை மீறலை காவல்துறை செய்துள்ளது - சட்டத்தரணி தவராசா!
"அடிப்படை மனித உரிமை மீறலை காவல்துறையினரே செய்துள்ளனர்." இவ்வாறு, அதிபர் சட்டத்தரணி தவராசா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டமைக்காக வேலன் சுவாமிகள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக 7 பேருக்கு எதிராக காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றையதினம் வெளியாகியது.
காவல்துறையினர் மீது வழக்கு
தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
"அடிப்படை மனித உரிமை மீறலை செய்தமை, உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல்துறையினரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எங்களது மக்கள் பிரதிநிதிகளை காவல்துறையினர் சந்தேக நபர்களாக காட்டி அவர்களது காலத்தையும், நேரத்தையும் வீணடித்துள்ளனர்.
அடிப்படை மனித உரிமை மீறலை காவல்துறையினரே செய்துள்ளனர், இதனால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை காவல்துறையினர் மீது தொடர வேண்டும், இதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றமும் உடனடியாக எடுக்க வேண்டும்." இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அதிபர் சட்டத்தரணி தவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
