ரணிலுடன் இணைந்த மைத்திரி தரப்பு உறுப்பினர்கள்..! கட்சி எடுத்த அதிரடி தீர்மானம்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்களை கிடைக்கப்பெற்றுள்ளன.
முதல் கட்டமாக அவர்களை கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, குற்றச்சாட்டு பத்திரம் ஒன்றை சமர்ப்பி்து, கட்சியில் இருந்து நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அரசாங்கத்தில் இணைந்த உறுப்பினர்களின் விபரம்
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர ஆகியேர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
அண்மையில் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற லசந்த அழகியவண்ண, கட்சியின் பொருளாளராக பதவி வகிப்பதுடன் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் உப செயலாளர்களாக பதவி வகிக்கின்றனர்.
இவர்கள் இந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
