யாழில் நிறைவுக்கு வந்த இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (29) காலை 10:00 மணியளவில் குறித்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் (Karunainathan Ilankumaran), அரச பேருந்து சாலை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இடையூறு
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று (28) முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு, பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இலங்கை போக்குவரத்து சபை யாழ் சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண முயற்சித்தார்.
குறித்த பேச்சுவார்த்தையின் விளைவாக தற்போது யாழ்ப்பாணத்தில் அனைத்து அரச பேருந்து சேவைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







