வவுனியாவில் முடங்கிய இ.போ.ச பேருந்து சேவைகள் : அவதியுற்ற பயணிகள்
புதிய இணைப்பு
இணைந்த நேர அட்டவணையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என கொண்டுவரப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா (Vavuniya) மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
இன்று காலையிலிருந்து குறித்த பேருந்துகள் சேவையில் ஈடுபடாமையினால் பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
தனியார் பேருந்துகளில் முண்டியடித்து மக்கள் செல்ல முற்பட்ட போதிலும் போதுமான பேருந்து வசதிகள் காணப்படாமையினால் பலர் தமது பயணத்தை இடைநிறுத்த வேண்டிய நிலைமையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தன.
தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணையை நடைமுறைப்படுத்த முடிவு செய்ததை எதிர்த்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.
இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும், அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாகக் கூறினார்.
நியாயமற்ற வேலைநிறுத்தம்
எனினும், தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பொறியாளர் பி.ஏ. சந்திரபால பதிலளித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னரே ஒருங்கிணைந்த நேர அட்டவணை உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று கூறினார்.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாகப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





