சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி
சிறிலங்காவின் சட்ட வரைவு துறையால் தயாரிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி தன்னியக்க வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது.
சிறிலங்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று மற்றும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வினைத்திறன் இன்மை காரணமாக வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப Social Security Contribution எனப்படும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டம்
இதன்படி ஆண்டு வருமானமாக 12 கோடி ரூபாய்களை விட அதிகமான வருமானம் ஈட்டுபவர்களிடம் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியாக 2.5 சதவீதம் அறவிடப்படும்.
இந்த வரியை ஏப்ரல் 2022 முதல் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டது. இந்த முன்மொழிவின் மூலம் 140 பில்லியன் ரூபாய்களை அரசங்கத்தால் வருமானமாகப் பெற முடியும் என அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், அதற்கான திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைவு துறைக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்ட வரைவு துறையால் தயாரிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் அதிபரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி சிறப்புத் தேவைகள் கொண்ட நபர்களின் பயன்பாட்டிற்கான ஒட்டோமொபைல் எனப்படும் தன்னியக்க வாகன மற்றும் உபகரணங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது.
