இந்த வருடத்துக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வாம் - வாயால் வடை சுடும் ரணில்
நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாடு இந்த ஆண்டு எட்டப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க மே தின நிகழ்வில் கூறினார். அவர் இது போன்ற ஒரு கருத்தை கடந்த வருடம் 2022 நவம்பர் மாதம் கூறி எதிர்வரும் 2023, பெப்ரவரி.04, இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவேன் எனக் கூறி இருந்தார். அது கானல் நீராகி அந்தக்காலக்கேடு மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அடுத்த குண்டை இப்போது போட்டுள்ளார்.
இதே போல் கடந்த 2015, நல்லாட்சி அரசின் காலத்தில் அவர் பிரதமராக இருந்தபோது புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சனைக்கான தீர்வு வழங்குவேன் என தமிழ்தேசிய கூட்டமைப்பு 16, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக இருந்து அதன் தலைவர் சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவராக பதவியில் இருந்தாலும் நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்காக முழு இணக்கப்பாட்டை நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய போதும், இறுதியில் ஏமாற்றப்பட்டு மூக்குடைபட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான்.
மூக்குடைபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இதன் தாக்கம் கடந்த 2020, பொதுத் தேர்தலில் 16, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10, நாடாளுமன்ற உறுப்பினர்களாக குறைந்ததே வரலாறு.
அரசியல் தீர்வு, புதிய அரசியலைப்பு திருத்தம் என்பது தான் செய்ய முடியவில்லை, எனின் வடக்கு கிழக்கு தாயகத்தில் உள்ள திட்டமிட்ட குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்தல், படையினர் முகாமிட்டுள்ள காணிகளை மீளக் கையளித்தல், தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், இவ்வாறான விடயங்களை கூட நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் செய்யவில்லை என்ற குற்றம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் இருந்தது அது மட்டுமின்றி அரசியல் தீர்வும் புதிய அரசியல் யாப்பும் நிச்சயமாக நல்லாட்சி அரசு செய்யும் என்ற நம்பிக்கையை சம்மந்தன் ஐயாவுக்கும், சுமந்திரனுக்கும் பிரதமர் ரணில் ஊட்டியிருந்தார்.
ரணில் ஊட்டிய நம்பிக்கையை முழுமையாக நம்பி அரசியல் தீர்வு பொங்கலுக்கு இடையில், தீபாவளிக்கு இடையில் கிடைக்கும் என வட கிழக்கு மக்களிடம் நம்பிக்கை ஊட்டி இருந்தார் சம்மந்தன் ஐயா.
இதுபோலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் நல்லாட்சி அரசின் காலத்தினுள் அரசியல் தீர்வு கிடையாது விட்டால் தாம் இனி அரசியலில் இருக்க மாட்டேன் எனக்கூறி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
உண்மையில் ரணிலை நம்பி ஏமார்ந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல. வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களும் தான்.
புலிநீக்க - தமிழ் தேசிய நீக்க அரசியல்
ஆனால் பொதுவான புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் விடயத்தை கச்சிதமாக காலத்தைக் கழித்து ஏமாற்றிவிட்டு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, மாவட்டக்குழு தலைவர் பதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி அதன்மீது அவர்களின் எண்ணங்களை மாற்றும் சதிவேலைகளையும் நல்லாட்சி அரசின் பிரதமர் ரணிலும், அதிபர் மைத்திரியும் கச்சிதமாக மேற்கொண்டு அதன் ஊடாக தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு அத்திவாரம் இட்டனர் என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும், மறைமுகமாக இது நகர்த்தப்பட்டது.
2004,இல் புலிநீக்க அரசியலுக்கு வித்திட்ட ரணில் 2015, இல் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு அடித்தளம் இட்டார்.
வடக்கு கிழக்கு தாயகத்தின் சுயநிர்ணய உரிமை, சுதந்திரமான வாழ்வு கிடைப்பதற்காக அரசியல் பணிகளை மேற்கொள்ளும் ஒரு கட்சியாக 1949, இல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி்யை தந்தை செல்வா ஆரம்பித்தார். அது தமிழ் தேசிய அரசியல் வளர்ச்சியடைந்து அகிம்சையில் தொடங்கிய போராட்டம் ஆயுதரீதியான போராட்டமாக மாறி 2009, இல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டாலும் 2015, வரை தமிழ் தேசிய அரசியல் அபிவிருத்திக்காகவோ, பதவி, சலுகைக்காகவோ சோரம் போன வரலாறுகள் இல்லை.
உரிமைதான் முதல்படி எம்மை நாமே ஆளும் அரசியல் தீர்வுதான் இலக்கு என்ற கொள்கையை முன்வைத்தே அனைத்து தேர்தலிலும் தமிழ் தேசிய அரசில் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரித்து மக்களிடம் வாக்குகளை பெற்றன.
2015, பொதுத்தேர்தல் தேர்தல் விஞ்ஞாபனமும் இதே கொள்கையில்தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் 2015, ஜனவரி,9ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன அதிபராக தெரிவு செய்யப்பட்ட பின்னரே நிலைமை தலைகீழானது.
இன ரீதியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 12 தமிழ் உறுப்பினர்களும், 8 சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
2012இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த 11, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் 2015 இல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சேர்ந்து சர்வகட்சி ஆட்சியமைத்தனர்.
இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியும், சுகாதார அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கல்வி, விவசாயம் இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு பிரதி தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வீதி அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டது.
கூட்டமைப்பின் வீழ்ச்சி
கிழக்கு மாகாண சபைத் 2015இல் அதிபர் மைத்திரி பதவி ஏற்று மாற்றியமைத்தபோது நான்கு கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்த உண்மையை புரிந்தும் புரியாத மாதிரியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் திட்டமிட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்தேசிய கூட்டமைப்பும் மட்டும் இணைந்து ஆட்சியமைத்துள்ளதாகவும் தமிழருக்கு கிடைக்க வேண்டிய முதலைமைச்சர் பதவியை சிறிலங்கா முஷ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்து கொடுத்தனர் என விசமத்தனமான பிரசாரங்களை வேண்டுமென்றே பரப்பினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த கல்வி அமைச்சு பதவியும், விவசாய அமைச்சு பதவியும் கிழக்கு மாகாணத்தில் சில அபிவிருத்தி வேலைகளை செய்ய முடிந்தாலும் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு விட்டுக்கொடுத்ததாக கூறப்பட்ட பிரசாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அப்போதும், எப்போதும் முறியடிக்கமுடியவில்லை.
இதற்கு காரணமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் தலைவர் றவூப் ஹக்கீம் தமது கட்சியை பலப்படுத்துவதற்காக 7, உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண சபையில் இருந்த முஸ்லிம் காங்கிரஷ் 11, உறுப்பினர்களுடன் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் எமது இராஜதந்திர சாணாக்கிய அரசியல் வெற்றிபெற்றது என காத்தான்குடியில் பிரசாரங்களை முன்வைத்தார். இவ்வாறான பிரசாரங்களாலும் 2020, பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியை சந்தித்தது.
நல்லாட்சியில் இருந்த 16, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல கோடி நிதி கம்பரலிய திட்டம் மூலமாகவும், விசேட அமைச்சரவை மூலமாகவும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு வடக்கு கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் வீதிகள், பாடசாலைகள், சமய வழிபாட்டுதலங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுகுளங்கள், வீட்டுத்திட்டங்கள் என பல அபிவிருத்திகளும், பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளும், சலுகைகளும் வழங்கப்பட்டன.
கடந்த 2020, பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திகளை செய்தமையால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து 16,ஆக இருந்த உறுப்பினர்கள் 20, உறுப்பினர்களாக தெரிவாகுவார்கள் என்ற எண்ணமும் அபிவிருத்திகளை பட்டியல் இட்டு மக்ககளிடம் வாக்குகளை பெறும் பிரசாரங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டனர். ஆனால் 10, உறுப்பினர்கள் மட்டுமே தெரிவானார்கள்.
இதில் வேதனையான விடயம் என்னவென்றால் நல்லாட்சி அரசில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவான், முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், யோகேஷ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஷ்வரன், ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லாட்சி அரசில் அபிவிருத்திகளை பல கோடிநிதியில் செய்திருந்தும் இவர்கள் எவரும் தெரிவாகவில்லை.
2015, தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 515,963, வாக்குகள் கிடைத்து 16, உறுப்பினர்கள் தெரிவானார்கள். 2020, தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 327,168 வாக்குகள் மட்டுமே கிடைத்து 10, உறுப்பினர்களே தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.
ஏமாற்றப்பட்ட கூட்டமைப்பு
2015 தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட 2020 தேர்தலில் 188,835 வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு காரணம் நல்லாட்சி அரசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றப்பட்டது என்பதே உண்மை.
இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் அல்லது தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் வேறு கட்சிகளாக இருக்கலாம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் அபிவிருத்திகளை காட்டி தேர்தல்களில் வாக்குகளை பெற முடியாது என்பது நிருபணமான உண்மை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விடுதலைக்காக போராடிய இனம் அந்த விடுதலையை பெறும் வரை அதை அடையும் திட்டங்களை முன்நிறுத்தியே தேர்தலில் வாக்குகளை பெறலாமே தவிர அபிவிருத்தி அரசியல்தான் தமிழ் தேசிய கட்சிகளின் நோக்கம் எனில் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும், யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மக்கள் வாக்களிப்பதில் என்ன தப்பு உள்ளது என்பதையும் அரசோடு சோரம்போன அந்தக் கட்சிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை சிந்திக்கவேண்டிய விடயம்.
தமிழ்தேசிய அரசியல் வரலாறு
தற்போதய அதிபர் ரணில் தலைமையில் உள்ள ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகளை எடுத்து வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்கலாம் எனவும் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் எனவும் சில தமிழ் தேசிய வாதிகளிடம் கருத்துகள் குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள சிலரிடம் உண்டு.
அப்படியான சிந்தனை உள்ளவர்கள் கடந்த கால தமிழ்தேசிய அரசியல் வரலாறுகளை மீட்டுப்பார்க்க வேண்டும். அமைச்சர் பதவிகளும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகளையும் நியமிக்கும் அதிகாரம் ஆளும் தரப்பு அதிபர், பிரதமர் ஆகியோருக்கு மட்டுமே உண்டு. அவர்களால் நியமிக்கப்படுபவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களாகவும் அரசை மீறி எதுவுமே செய்ய முடியாதவர்களாகவே இருக்கலாம்.
இதற்கு உதாரணங்கள் பல உண்டு. கடந்த நல்லாட்சி அரசில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஷ்வரனால் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியாமல் போனதை விட்டாலும் அந்தச் செயலகத்திற்கு ஒரு கணக்காளரைக் கூட நியமி்க்க அம்பாறை மாவட்ட குழு இணைத் தலைவராக இருந்த அவரால் முடியவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் பாலத்திற்கு நல்லாட்சி அரசின் போது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸமன் கிரியல்ல, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா, முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், 2018இல் அடிக்கல் நட்டு கல்லில் பெயர்கள் பொறிக்கப்பட்டும் இன்றுவரை மண்டூர் பாலம் அமைக்கப்படவில்லை.
இதுவும் நல்லாட்சி அரசின் அப்போதைய நாடகமாக இருந்தது. மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பதவியால் அதை செய்ய முடியவில்லை.
இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துபேரும் எதிர்க்கட்சியில் இருப்பதால் மட்டுமே பல விடயங்களை நாடாளுமன்றத்திலும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் தட்டிக்கேட்கின்றனர் என்ற உண்மையை புரியவேண்டும்.
இன்னுமொரு உதாரணம் கடந்த 2012, தொடக்கம் 2015, வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராகவும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராகவும் செயற்பட்ட சாணக்கியன் அப்போது தமிழ் நில அபகரிப்பு பற்றி எதுவுமே பேசமுடியவில்லை அரசாங்கத்தால் நியமனம் பெற்றதால் அரசுக்கு எதிராக கதைக்கமுடியாது இருந்தது இது உண்மை.
சலுகை அரசியலுக்கு இடமில்லை
ஆனால் அதே சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக 2020இல் தெரிவு செய்யப்பட்டு எதிர்க்கட்சியாக இருப்பதாலேயே மட்டக்களப்பில் அரச தரப்பு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதை தட்டிக்கேட்டு, நாடாளுமன்றத்திலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் துணிச்சலுடன் சுட்டிக்காட்டி எமது உரிமைக்காக குரல் கொடுக்கிறார். இதற்காகத் தான் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சலுகை அரசியல் இல்லை உரிமை அரசியலே தமிழ்த்தேசிய அரசில் என்பதை தமிழ் இளைஞர்கள் புரியாதவரை எமது விடுதலை இன்னும் தூரமாகவே செல்லும்.
எமக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை பெறும் பணிகளை முன்னெடுக்கவே தமிழ் தேசிய அரசியல் உருவாக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உருவாக்கப்பட்டது, தமிழர் விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது, விடுதலை இயக்கங்கள் உருவாக்கப்பட்டது, புலம்பெயர் நாடுகளிலும் பல செயல்பாடுகள் இடம்பெறுகின்றது.
இந்த தமிழ் தேசிய செயற்பாடுகளால் தான் சர்வதேச தாக்கத்தின் ஒரு விளைவுதான் இலங்கை அரசுக்கு பல நாடுகள் இனப்பிரச்சனை தீர்வுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றமை வெளிப்படை. அதனை சமாளிக்கவே தற்போது இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன்‘‘ என அதிபர் ரணில் விக்ரமசிங்க மே தின உரையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்தப் பொறிமுறைக்குள் வந்து விசேடமாக நாடாளுமன்றத்தில் ஒரு அரசாக நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி அதிபர் கூறியதற்கு காரணம் தமிழ்தேசிய அரசியலின் உறுதியான வெளிப்பாடுகள் மட்டுமே.
ரணிலின் நரித்தந்திரம்
ரணிலின் நரித்தந்திரத்தை கடந்த பல வருடங்களாக அவதானித்து உணர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐயா "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்" என்கடந்த மே தினம் (01.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
பல தடவை சிங்கள ஆட்சியாளர்களால் கடந்த 74, வருடங்களாக ஏமாற்றப்பட்டுள்ள தமிழ் தலைமைகள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வ கட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதியில் மட்டுமல்ல துப்பரவாக எதுவுமே நடைபெறவில்லை. வாக்குறுதிகள் மாத்திரமே அரசால் வழங்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் எதுவும் இல்லை. அதுதான் உண்மை. இந்த விடயம் சம்பந்தமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் சில முடிவுகளை அறிவிப்போம் என இன்றைய அதிபர் ரணிலை நோக்கி சம்மந்தன் ஐயா இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
உண்மையில் ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரை தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏனைய தலைவர்களை விட சகல விடயங்களையும் அறிந்த ஒரு அதிபர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமானாலும், பௌத்த துறவிகளின் இனவாதமும், இனப்படுகொலையாளர்களின் எதிர்பையும் மீறி இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவார் என நினைப்பது வெறும் பகல்கனவே.
தவணைகளைக் கூறி சர்வதேசத்துக்கு ஒருமுகமும், மொட்டுக்கட்சிக்கு ஒருமுகமும், மகிந்த கொம்பனிக்கு ஒருமுகமும், பௌத்த பிக்குகளுக்கு வேறு முகமும், தமிழ் தலைமைக்கு நரி முகமும் காட்டி அடுத்த அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் வெற்றிபெறுவதே அவரின் திட்டம். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது அதிபர் ரணில் வாயால் சுடும் வடை மட்டுமே.
-பா.அரியநேத்திரன்-
