சுற்றுலாத் துறையில் 2 மில்லியன் இலக்கை எட்டவுள்ள இலங்கை
இலங்கையின் சுற்றுலாத் துறையில் (Sri Lanka Tourism) குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய நிகழ்வு நாளை (டிசம்பர் 26) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெறவுள்ளது.
தற்போதைய இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளின் வெற்றியை இது எடுத்துக்காட்டுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், இந்த சாதனையைக் குறிக்கும் வகையில் சிறப்பு விழாவிற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 1,966,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை இந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி 22 ஆம் வரையான காலப்பகுதியில் 161,383 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா (India) முதலிடத்தையும் ரஷ்யா (Russia) இரண்டாம் இடத்தையும் பிரித்தானியா (United Kingdom) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |