இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு - தலைமறைவாகியிருந்த நிலையில் சர்வதேச ஊடகத்தினூடாக அர்ஜூன!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக சர்வதேச ஊடகம் ஒன்றின் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர் பிணைமுறி மோசடி தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளால் தேடப்படும் ஒரு நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் முதலாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இவர் சிறிலங்கா அதிகாரிகளால் தேடப்பட்டு வருகிறார்.
பிணைமுறி மோசடி
மத்திய வங்கியினால் 2015 பெப்ரவரி முதல் 2016 மே மாதம் வரை அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்திய திறைசேரி பிணைப்பத்திரங்களை வழங்குவதில் இடம்பெற்ற நிதி முறைகேடுகளில் இவர் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
மத்திய வங்கியின் பிணைமுறி பரிவர்த்தனைகளில் இடம்பெற்ற முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அவர் சொந்த நாடான சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு அறிவித்தலை விடுத்த இன்டர்போல்
மகேந்திரனை நாடு கடத்துவதற்கு வசதியாக சிங்கப்பூரிடம் இலங்கை பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் மேன்முறையீட்டுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அவரை கைது செய்வதற்கு இன்டர்போலும் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரலையில் தோன்றிய அர்ஜூன
இந்நிலையில், நேற்று சிங்கப்பூரில் இருந்து CNN பிலிப்பைன்ஸ் ஒளிபரப்பிய நேரலையிலேயே இவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
The Final World என்ற நிகழ்ச்சியின் அறிவிப்பாளர், இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
இதன் போது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
கடன் வழங்குபவர்களை சம்மதிக்க வைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திடீர் வரி குறைப்பு பணவீக்க அழுத்தத்தை உருவாக்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
உர இறக்குமதியில் கொள்கை மாற்றம்
அத்துடன் அரசாங்க செலவினங்களில் பெரும்பாலானவை புதிய பணத்தை அச்சிடுவதன் மூலம் நிதியளிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார். உர இறக்குமதி தொடர்பான விவசாயக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
இரசாயன உரத்திலிருந்து கரிம உரத்திற்கு மாறிய செயல்பாடு தேயிலை மற்றும் பிற ஏற்றுமதி பயிர்களை ஆழமாக பாதித்தது. மேலும் கொவிட் இலங்கையைத் தாக்கியவுடன் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது.
இதனால் தான், மற்ற நாடுகளை விட இலங்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
