நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கூட்டுத்தாபனம் வெளியிட்ட விசேட அறிக்கை
பரிவர்த்தனை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (30) கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், “கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் எரிபொருள் இருப்பு வலுவான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்பு காணப்படுகின்றது.
எரிபொருள் பராமரிப்பு தடை
இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தரவுகளின்படி, இன்றைய நிலவரப்படி, 83,236 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 9955 மெற்றிக் தொன் சுப்பர் டீசல், 20,640 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் 18,354 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 பெற்றோல் கையிருப்பில் உள்ளது.
எனினும் நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளின் முழு அளவையும் விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தால் வலுவான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கும் செயல்முறை தடைப்பட்டது.
கியூ ஆர்(QR) முறை
கியூ ஆர்(QR) முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி எரிபொருள் வெளியிடப்படுவதால் எரிபொருள் விநியோக வலையமைப்பு முறையான முகாமைத்துவத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் கொள்வனவுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தில் கொள்வனவுகள் குறிப்பிட்ட நடவடிக்கைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
எரிபொருள் நெருக்கடியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ ஆர்(QR) முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.