எம்மைத் தடை செய்த யுகம் மலையேறிவிட்டது - இனி ரணிலால் முடியாது!
இலங்கையின் வரலாற்றில் இரண்டு தடவைகள் மக்கள் விடுதலை முன்னணியை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருந்தாலும் தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் அதை செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் அவர் செய்தவற்றை ரணிலால் செய்ய முடியாதெனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது எனவும் அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை திசை திருப்பிய அரசாங்கம்
மக்கள் விடுதலை முன்னணியை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் உண்மையை யாராலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மக்கள் விடுதலை முன்னணி மீது அரசாங்கம் பழி சுமத்தி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஆதரவை பெற்ற தமது கட்சியை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்தால், அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைதி போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ள அரசாங்கம்
சிறிலங்கா அரசாங்கம் அமைதி போராட்டங்களை முன்னெடுத்தவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதாகவும் நீதிமன்றத்தை அவமதித்த நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தவை அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கவில்லை எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்கவும் இன்றைய அரசியலில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு காணவும் தமது கட்சியின் தலைமைத்துவத்தால் முடியுமெனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

