குட்டையைக் குழப்பும் காய் நகர்த்தலை மீண்டும் ஆரம்பித்த ரணில் - பலிக்கடாவாகுமா சஜித் தரப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை வளைத்துப் போடும் முயற்சியை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கைவிடவில்லை என்றும், தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்றும் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அவ்வாறு அரசுடன் ஹர்ஷ டி சில்வா, இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு பதவி கிடைக்கும் என்றும் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா ஆகிய மூவருமே ரணிலுக்குத் தேவைப்படுபவர்கள். அதில் மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் ஏற்கனவே அரசுடன் இணைந்துவிட்டார்கள்.
ரணிலின் வாக்குறுதி
அதனடிப்படையிலேயே ஹர்ஷவை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணையுமாறு ரணில் பல தடவைகள் பேசியுள்ளார். அதேவேளை, நிதி அமைச்சு பதவி தருவதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், ஹர்ஷ டி சில்வா தான் தனியே செல்வதை விரும்பாது கட்சியுடன் போய்ச் சேர்வதைத் தான் விரும்புகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதே விருப்பத்தைத் தான் முன்னர் ஹரின் பெர்ணாண்டோவும் சஜித்திடம் முன்வைத்திருந்தார். அதாவது, பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, குறைந்தது கட்சியில் இருந்து 5 பேரையாவது அரசுடன் இணைத்து செயற்படுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.
ஹரினின் பேச்சை கேட்காத சஜித்
ஆனாலும் ஹரினின் எந்த பேச்சையும் சஜித் அப்போது கேட்கவில்லை. இருப்பினும் அரசுடன் இணையும் முன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் பல தடவைகள் பேசினார்.
இவ்வாறான நிலையிலேயே ஹர்ஷவை சிறிலங்காவின் அதிபராக்குவோம் என்ற கூற்றை ஆரம்பத்தில் ஹரின் முன்வைத்தார். ஆனாலும் அவரின் எந்த கூற்றிற்கும் சஜித் செவிசாய்க்கவில்லை.
இதனால் மனுஷவையும் இணைத்துக்கொண்டு அரசுடன் சேர்ந்தார்.
இப்போது ஹரின், ரணிலின் பணிப்புரைக்கமைய ஹர்ஷவையும் அரசுடன் சேர்ப்பதற்கான முயற்சியில் மீண்டும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் தென்னிலங்கை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
