யாழில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - சுகாதார பிரிவினர் விடுத்துள்ள அறிவிப்பு!
யாழில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தென்மராட்சி பகுதியில் கொரோனாத் தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியில் கொரோனா நோயாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருந்து, புகையிரதம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுகின்ற நெரிசல் நிலைமையால் கொரோனா மேலும் தீவிரமடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும் சுகாதார பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் தென்மராட்சியில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், கொரோனா மரணங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
