வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க அனுமதிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிநபர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்த தொகுதியைத் தவிர, அருகிலுள்ள தொகுதிகளில் அரச பணியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்த 3 ஆயிரம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொழில் இன்றி நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பொருளாதார நெருக்கடி
இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் வரையில் அரச ஊழியர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளை கருத்திற்கொண்டு அவர்கள் அரச பணிகளில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அமைச்சரவைக்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொதுத்துறை ஊழியர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
மீண்டும் பணி அனுமதி
அதேவேளை, இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர மீளெடுக்கப்படவில்லை.
ஆகவே தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு அருகில் உள்ள தொகுதிகளில் அரச பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
