அதானியின் திட்டங்களை மறுக்கும் மன்னார் மக்கள் - வாழ்வியல் சிதைக்கப்படும் அபாயம்!
காற்றாலை மற்றும் மணல் அகழ்வு செயற்திட்டங்கள் மன்னார் தீவுக்குள் வேண்டாம் என அருட்தந்தை ஞானப்பிரகாஸம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இடம் பெற்றுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைக்கு எதிராக இன்று பேசாலை பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும் பேசாலை பங்குத் தந்தையுமாகிய அருட்தந்தை ஞானப்பிரகாஸம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மணல் அகழ்வு, காற்றாலை நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் இந்த தீவுப் பகுதியில் நடைபெறக்கூடாது என்பது தான் மக்களுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.
காற்றாலையால் மக்கள் வாழ்வியலில் பாதிப்பு
மக்களுடைய எதிர்காலம், எதிர்கால சந்ததியினுடைய எதிர்காலம் இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலை செயற்திட்டங்களால் பாதிப்படைகின்றது. அதே நேரம் இந்த திட்டங்களால் மக்களின் தொழில் வாய்ப்பும் இல்லாமல் போகிறது.
வாழ்வாதாரம், மீன் வளம் என்பன மணல் அகழ்வையும் காற்றாலை மின்செயற்திட்டத்தையும் செயற்படுத்துவதால் இல்லாமல் போகின்றது.
இதற்கு உரியவர்களும் அரசாங்கமும் செவிசாய்த்து இந்த மக்களுக்கு ஒரு வாழ்வை கொடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலையில், மக்கள் ஒன்று கூட்டி பிரதேச சபைக்கு சென்ற பொழுதும் பிரதேச சபை தவிசாளர் வெளியில் வராது அங்கு மறைந்திருந்தது எங்களுக்கு மிகவும் கவலையை தருகின்றது. இத்தனை பேருடைய உணர்வுகளையும் மதிக்காது அவர் நடந்திருக்கின்றார்.
அதிகாரிகளின் அசமந்த போக்கு
ஆகவே இந்த உயர் அதிகாரிகளுடைய அசம்பந்தபோக்கு தொடர்கின்ற பொழுது மக்கள் எல்லோருடைய அழிவும் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகையினாலே இதைத் தொடர்ந்து தாங்கள் வருகிறன்ற திங்கட்கிழமை மன்னார் பகுதியிலே மாபெரும் ஒரு விழிப்புணர்வு, ஒன்று கூடல் மற்றும் போராட்டத்தை நடத்தவிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த விழிப்புணர்வு போராட்டத்திலே மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் இந்த தீவில் இருக்கின்ற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் எனவும் ஆவண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இரண்டொரு நாட்களில் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக மக்கள் தீர்மானித்திருக்கின்றார்கள்.
ஆகையால் இந்த உயர் அதிகாரிகளுடைய அசமந்த போக்கை வன்மையாக கண்டிப்பதோடு அவர்கள் மக்களுக்காக இருக்கிறார்களா என்ற பெரிய கேள்விக்குறி எங்களுக்கு எழுகின்றது? எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களை சந்திக்க மறுத்த தவிசாளர்
ஆகவே இதை மனதில் கொண்டு தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற இந்த போராட்டங்களிலே மக்கள் நிறைவாக கலந்து கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இன்று மன்னார் பிரதேச சபையிலே நடந்த சம்பவம் மிகவும் மன வருத்தத்துக்குரியது, தவிசாளர் எங்களை சந்திக்காது மக்களை சந்திக்காது அவர்களிடமிருந்து மகஜரை பெறாதது கண்டிக்கத்தக்கது.
இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை நடைபெறுகின்ற இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரித்தார்.
தலைமன்னாரில் இருக்கக்கூடிய கிராமங்கள் மற்றும் சிறு தோப்பு மற்றும் வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வந்து இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
மிகவும் அமைதியான போராட்டமாக இது நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

