உடைந்தது மொட்டுக்கட்சி - தயாராகிறது அடுத்தகட்ட நகர்விற்கு!
பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான பல யோசனைகளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க பொதுஜன பெரமுனவின் அணியொன்று தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் பொதுஜன பெரமுனவுக்கு மற்றுமொரு அணி தனியாக கூடி கலந்துரையாடி இந்த யோசனைகள முன்வைக்க தீர்மானித்துள்ளது.
அமைச்சர் ரமேஷ் பத்திரன, மகிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்கள் சீதா அரம்பேபொல, அனுஷ பெஸ்குவல், சிசிர ஜயகொடி, மதுர விதானகே ஆகியோர் தனியாக கூடி இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவிக்கையில்,
தமது அணி கூடி பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அரச நிதி முகாமைத்துவம் சம்பந்தமாக அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கைகோர்க்கவுள்ள அநுர

அரச நிதி முகாமைத்துவ அமைச்சர் ஒருவரை நியமிப்பது அரச வருமான வரி திணைக்களத்திற்கு வெளியில் ஒழுங்குப்படுத்தல் நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான யோசனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இந்த வேலைத்திட்டத்தை பாராட்டியுள்ளன. அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்து இது சிறந்த திட்டம் எனவும் தானும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த யோசனையை பாராட்டியதுடன் நீதியான சமூகத்திற்கான அமைப்பின் ஊடாக இதனையே செய்ய முயற்சித்ததாகவும் கூறினார்.
வருடாந்த வருமானம் அதிகரிக்கும்

இது தொடர்பாக 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோரியுள்ளோம். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கவே நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இந்த யோசனையை சரியாக நடைமுறைப்படுத்ததினால், வருடாந்தம் அரசுக்கு 3 ஆயிரம் பில்லியன் வரி வருமானத்தை பெற முடியும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.