முகூர்த்தம் குறிக்காத சுயம்வரத்திற்கு வரிசை கட்டி முட்டி மோதல்!
சிறிலங்காவில் 2024 ஆம் ஆண்டிற்கான அதிபர் தேர்தலுக்காக இப்போதே வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என அரச வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால் இவ்வாறான தேர்தல் இடம்பெறுவது தொடர்பில் இது வரை ஒரு திகதி கூட குறிக்காத நிலையில், வேட்பாளர்கள் வரிசைகட்டி காத்திருப்பதானது, முகூர்த்தம் குறிக்காத சுயம்வரத்திற்கு மணமக்கள் காத்திருப்பதைப் போன்றது எனவும் வேடிக்கையாகப் பேசப்படுகின்றது.
சிறிலங்கா அதிபர் ஒருவர் நான்கு வாருடங்கள் அவரது பதவிக் காலத்தைக் கழித்த பின் தேர்தலுக்குச் செல்வதற்கான அவரது விருப்பத்தை அறிவிக்க முடியும் என்பது மரபு.
தயாராகும் வேட்பாளர்கள்
ஆனால், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால அதிபராக இருப்பதால் சட்ட ரீதியாக அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உத்தியோகபூர்வமாக அதிபர் தேர்தல் இடம்பெறப்போவது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் என்றாலும், அதற்கு முன்னரே தேர்தலை நடத்துவதற்கு ரணில் வியூகங்களை வகுத்து வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே தான் திகதி குறிப்பிடப்படாத தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுகின்றனர் என்றும், தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
நீதிமன்ற ஆலோசனைக்குத் தயாராகும் ரணில்
அதற்கமைய, மொட்டுத் தரப்பு வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியில் அநுரகுமார திஸாநாயக்க, சுதந்திரக் கட்சியில் மைத்திரிபால சிறிசேன உட்பட ஏனைய கட்சிகளிலும் வேட்பாளர்கள் பலர் தயாராகி வருகின்றனர் எனவும் உள்ளகத் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், தற்போது அதிபர் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெற்று, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராகி வருகின்றார் என்றும் தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
