விடுதலைப்புலிகளுடனான ரணிலின் ஒப்பந்தம் - மகிந்தவை அதிபராக்கியதன் பின்னணி இதுவே!
நாட்டைப் பிரிக்கும் ரணிலின் திட்டத்தை முறியடிப்பதற்காகவே நாம் அன்று மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா அதிபராக்கினோம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அவ்வாறு மகிந்த ராஜபக்சவை 2005 இல் நாம் அதிபராக்கியதும் அவர் பின்னர் திருடியதும் ஒரே விடயம் அல்ல. வேறு வேறு விடயம் எனவும் ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது, அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை நாட்டின் அதிபராக்கினோம்.
ரணிலின் ஒப்பந்தம்
அவ்வாறு நாம் மகிந்தவை அதிபராக்கியது திருடுவதற்கு என்றால் அதை நாம் பாரமேற்போம். ஆனால் அவ்வாறில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே நாங்கள் மகிந்தவைக் கொண்டு வந்தோம்.
1977 இற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எல்லா சிறிலங்கா அரசாங்கங்களும் ஊழல், மோசடிகளைச் செய்தே உள்ளன. அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துள்ளன.
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி
அதேபோலவே, மகிந்த ஆட்சிக்கு வந்ததும் திருடத் தொடங்கினார். அதற்கு எதிராகவும் நாம் போராடினோம். பின்னர் அவரைத் தோற்கடிப்பதற்காகவும் நாமே களமிறங்கினோம்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் காலத்தில் , ஜே.வி.பி. ஆட்சி மலரும் போது, இந்த ஊழல், மோசடிகளுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
