பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி விலகல் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், தனது இராஜினாமா கடிதத்தை நேற்று கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்தியின்படி அவர் இராஜினாமாவை வழங்கவில்லை என்று கூறினார். எவ்வாறாயினும், புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டவுடன், அவர்கள் அமைச்சுக்கு வேறு ஒரு செயலாளரை நியமிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் நேற்றைய தினம் சுமார் 4 மணித்தியாலங்கள் நீண்ட வாக்குமூலத்தை அவர் பதிவு செய்திருந்தார்.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொதுஜன பெரமுன விசுவாசிகளை கலைக்க நீர்த்தாரையோ அல்லது கண்ணீர்ப்புகையோ பிரயோகிக்க வேண்டாம் என மேல் மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை வழங்கியதாக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜகத் அல்விஸ் மற்றும் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து அது நீக்கப்பட்டது.
இதற்கிடையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான வழக்குகள் தொடர்பாக பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபருக்கு ஜகத் அல்விஸ் அனுப்பிய கடிதங்கள் குறித்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை தெரிவித்திருந்தது.
மேலும் போராட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.