இலங்கைக்கு பச்சைக்கொடி - கிடைக்கவுள்ள 7 பில்லியன் டொலர்கள்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 330 மில்லியன் டொலர்கள் விரிவான கடன் வசதி கிடைத்ததைத் தொடர்ந்து, மேலும் 7 பில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக இலங்கை பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியின் கீழ் இந்தக் கடன்கள் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடன்கள் தொடர்பில் அண்மையில் உலக வங்கியின் இலங்கை பணிப்பாளர் சியோ கன்டா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு ஆதரவாக கடன் தொகை
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இதன்போது எதிர்கால பொருளாதார நடவடிக்கைகளுக்கு உலக வங்கியின் ஆதரவு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, இலங்கைக்கு ஆதரவாக இந்த கடன் தொகை வழங்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியால் இலங்கை சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதுடன் எதிர்காலத்தில் மேலும் கடன் உதவி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
