தேர்தலில் இருந்து விலகிய கூட்டமைப்பு - சம்பந்தனுக்கு ஏமாற்றம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று இரு பகுதினர் உரிமை கோரிவரும் நிலையில், யார் தான் உண்மையில் கூட்டமைப்பு என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
உண்மையில் யார் தான் கூட்டமைப்பு?
இதற்கு பதிலளித்த சுமந்திரன், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது 2001 ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி அல்ல.
ஆனால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்ந்து கூட்டமைப்பாக இயங்குகிற போது எடுக்கப்படும் இணக்கப்பாடுகள் குறித்து அறிவித்தல் கொடுக்க வேண்டும். அப்படியான அறிவித்தல்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
அந்தக் கூட்டமைப்பில் ஒவ்வொரு தருணங்களில் ஒவ்வொரு கட்சிகள் இருந்திருக்கின்றன. இறுதியாக இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ரெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புகள் சேர்ந்து தான் கூட்டமைப்பாக இருந்தது.
இந்தத் தேர்தலில் குறித்த மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவது உகந்தது என்று தமிழரசுக் கட்சி ஒரு பரிந்துரையை முன்வைத்தது. அதை ஏனைய கட்சித் தலைவர்களுடனும் பேசி நாங்கள் முடிவெடுப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது.
புளொட் மற்றும் ரெலோ அதற்கு இணங்கவில்லை. எமது யோசனைக்கு அவர்கள் இணங்காத காரணத்தினால் அவர்கள் சொல்லுவது போலவே நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.
சம்பந்தனின் கேள்வி - பதில்
ஆனால் அவர்களோ நீங்கள் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து விட்டீர்கள் என்றும் ஆனால் நாங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறு தரப்புகளுடன் இணைந்து எப்படி போட்டியிடுவது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்றும் சொல்லித்தான் அந்த கூட்டம் முடிவடைந்தது.
கூட்டம் முடிவடைவதற்கு முன்னதாக இரண்டு தரப்பினரிடமும் சம்பந்தன் ஐயா கேள்வி ஒன்றைக் கேட்டு பதிலையும் பெற்றிருந்தார்.
அதாவது இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை எந்த தரப்பும் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிப்பாட்டை அனைவரும் கொடுத்திருந்தோம்.
ஆனால் ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரு தரப்பினரும் இதனை பேணுவதாக தெரியவில்லை” - என்றார்.
