வறுமையின் பிடியில் இலங்கை - கருத்துக்கணிப்பில் தகவல்
இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
2019 முதல் 2023 ஆம் ஆண்டுக்குள் 4 முதல் 7 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் இலங்கையில் வறுமையின் பிடியில் சீக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இந்தக் காலப்பகுதிக்குள் 31% அதிகரித்துள்ளது என்பதும் லிர்னே ஏசியா எனும் பிராந்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது, ஆய்விற்குற்படுத்தப்பட்ட 10 ஆயிரம் பேரில் 33 வீதமானவர்கள் தாங்கள் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் உணவை தவிர்த்து உள்ளதாகவும், 47 விதமானவர்கள் உணவை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்வியில் ஸ்தம்பிதம்
மேலும், 27 வீதமானவர்கள் பிள்ளைகளுக்கு உணவை வழங்குவதற்காக தங்கள் உணவை குறைத்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் ஆறு வீதமானவர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்பதும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் தங்களிடம் பிள்ளைகளுக்கு கொப்பிகள் வாங்குவதற்கான பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளதுடன், பழைய கொப்பிகளில் எழுதப்படாத பக்கங்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களில் அரைவாசிக்கு அதிகமானவர்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் வறுமை 6 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்புகளின் மூலமாக தெரிவந்துள்ளது.
