உலகின் பாதுகாப்பான சுற்றுலா தளப் பட்டியலுக்குள் இலங்கை
உலகிலாவிய ரீதியில் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளக் கூடிய நாடுகளில் இலங்கை 12 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக வேர்ல்ட் பெக்கர்ஸ் (Worldpackers) என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வேர்ல்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்திற்கு அமைய சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய மிகவும் பாதுகாப்பான நாடாக ஐஸ்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் பாதுகாப்பான சுற்றுலா தளம்
சுற்றுலாப் பயணங்கள் மற்றும் நாடுகள் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் வேர்ல்ட் பெக்கர்ஸ் இணையத்தளம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை முன்னெடுத்திருந்தது என அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளக் கூடிய 13 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பிடித்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளின் கணிப்பின்படி இலங்கை 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது எனவும் குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சிகிரியா
மேலும், வேர்ல்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்துக்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மிக்க இடமாக சிகிரியா கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளக் கூடிய நாடுகளில் 12 ஆவது இடத்தை பிடித்திருப்பது மிகப்பெரிய சாதனை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
