கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் முன்னிலை வகிக்கின்றது என்ற செய்தியை கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
கல்வியிலும் நாம் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகின்ற செய்தியாகும். என்றபோதும் இலங்கையில் ஒடுக்கப்படும் இனமாக எமது கல்வி வளர்ச்சிமீது நாம் இன்னமும் கரிசனைகளை விரிவாக்கி வேண்டி இருப்பதும் கவனத்திற்கு உரியது.
மாணவர் எழுச்சி நாள்
2009 இற்குப் பின்னரான ஈழச் சூழலில், தமிழ் மக்களின் உரிமைக்கும் விடுதலைக்குமான போராட்டத்தின் பெரும் பகுதி மாணவச் சமூகத்திடம் தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாணவர்களின் புரட்சியும் போராட்டமும் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
தமிழ் மிதவாத அரசயிலில் தோற்பட்ட தோல்வியும் சலிப்பும் மாணவர்கள் மத்தியில் மிகப் பெரும் புரட்சியை உண்டு பண்ணியது. அந்தப் புரட்சியின் வழியாகவே தமிழர்களின் தனித்தேச போராட்டம் முகிழ்ந்தது எனலாம்.
மாணவர் எழுச்சி நாளை அனுஷ்டிக்கும் இக் காலகட்டத்தில் மாணவர்களின் மகத்துவமான போராட்டத்தை இன்றைய சூழலை அடிப்படையாக வைத்து நினைவுகொள்வது என்பது அவசியமானது. ஜூன் 06 தமிழீழ மாணவர் எழுச்சி நாள்.
இந்த நாள் என்பது எப்போதும் அடக்குமுறைக்கு எதிரான ஒரு எழுச்சி நாளாகத்தான் இருந்திருக்கிறது. ஈழ மண்ணில் மாணவர்களின் உரிமைகளை அரசு மறுத்து வந்திருக்கிறது.
பாடசாலைகள்மீது குண்டுகளை வீசி அவர்களை படுகொலை செய்த கசப்பான சம்பவங்கள் பலவும் நடந்திருக்கின்றன.
நாகர்கோவில் பாடசாலைமீது நடாத்திய விமானத்தாக்குதலில் 25 பள்ளி மாணவிகள் கொன்றழிக்கப்பட்டதை தமிழ் இனம் ஒருபோதும் மறவாது. மன்னாரில் 2006இல் பாடசாலை மாணவர்களின் பேருந்து மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் குருதிவாடை இன்றும் மாறவில்லை.
மாணவர்கள் மீதான படுகொலைகள்
திருகோணமலையில் 2005இல் நடந்த ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் கொல்லப்பட்ட புருத்சோத்மன் உள்ளிட்ட பல மாணவர்களின் படுகொலைகை்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலையில் இனப்படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிகள் 56பேரும் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்ட மண்ணில்தான் நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
2009இற்குப் முன்னரான காலத்தில் மேற்குறித்த மாணவர் சமூகம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மாணவர் எழுச்சி நாள் எதிர்வினை செய்திருக்கிறது.
கண்டனங்களை பதிவு செய்து, கேள்விகளை எழுப்பும் புரட்சி செய்தது. மாணவர் எழுச்சி நாள் என்பது மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவு நாளாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைக்கும் வரலாற்றில் நம்ப முடியாத ஒரு அதிசியமான வீரனாக, தனியொருவனாக ஈழ விடுதலைக்காக போராடிய முதல் வீரனாக, முதல் விதையாக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் பொன் சிவகுமாரன்.
ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் வெகுண்டெழுந்தார்.
பின்போர்க்கால கல்வி வீழ்ச்சி
போர்க்காலத்தில் இல்லாதளவுக்கு அதற்குப் பிந்தைய காலத்தில் வடக்கு கிழக்கில் கல்வி பெரும் வீழ்ச்சியை சந்தித்து. போர்க்காலம் என்பது மாணவர்களை சுற்றியும் அவர்களின் கல்வியை குறித்தும் கடும் போரை நடத்தியவொரு காலம். உண்பதற்கு உணவில்லை.
அரசின் கடுமையான பொருளாதாரத் தடையால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவித்தன. வெறும் வயிற்றுடன் இலைக் கஞ்சியை நம்பி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். மின்சாரத்தை தெரியாத காலமும் அதுதான்.
சில நகரங்களில் புலிகளின் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை வழங்கியிருந்தன. கிராமங்களில் மிகச் சிறியளவிலான விளக்குகள்தான் பயன்பாட்டில் இருந்தன.
இருட்டுக்குள் புத்தகங்களை விரித்து கண்ணை அகல விரித்து படித்து எழுதினர் மாணவர்கள். அதைப் போல வீடுகள் என்பதே தரப்பால்களாலும் ஓலைகளினாலும் ஆன கூடாரங்கள்தான். ஆனாலும் அங்கு மாணவர்கள் நன்றாகப் படித்தனர்.
எப்போதும் தமிழரின் வானத்தை விமானங்கள் உழுது கொண்டிருக்கும். பாடசாலைகள் எனப்பட்டவை, பதுங்குகுழிகளால் ஆகியிருந்தது. பாடசாலை மணியைப் போல அடிக்கடி விமானங்கள் வந்து வானத்தை கிழிக்கும். பிள்ளைகளை பதுங்குகுழிக்குள் பத்திரமாக இருக்கச் செய்துவிட்டு ஆசிரியர்கள் வெளியில் நிற்பர்.
நாள் முழுவதும் விமானங்கள் வந்து படிப்பை குழப்பிச் செல்லும். சிலவேளை பள்ளிகள் மீது குண்டுகளைப் போடும்.
போர்க்காலத்திலும் உயர்ந்த கல்வி
ஆனாலும் அன்றைக்கு கல்வி சித்தி விகிதம் என்பது உயர்வாகவே இருந்தது. போர் நடந்த காலத்தில் 72 வீதத்திற்கு குறையாத சித்தியை வடக்கு கிழக்கு மாகாணங்கள் வகித்தன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுடன் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் மாவட்டங்களின் பெறுபேறுகள் கொழும்புக்கு சவால் விட்டன.
அகில இலங்கை ரீதியாக மாணவர்கள் முன்னிலை இடத்தை பெறுவதை அப்போது ஒரு அதிசயமாகவே பார்த்தனர். கடும் போர், பொருளாதாரத் தடை, பள்ளிகளின் இடப்பெயர்வு என இனவழிப்பு யுத்தம் கூறுபோட்ட காலத்திலும் கல்வியில் உயர்ந்திருந்தோம்.
மாணவர்களின் சாதனை பெரிதாய் இருந்தது. இன்றைக்கு ஏன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவை சந்திக்கின்றன என்று கல்வியாளர்கள் ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
போர் முடிந்து பல ஆண்டுகளாக இந்த நிலைதான் தொடர்ந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில், மிகக் கடும்போர் நடந்த காலத்தில் இல்லாத வசதிகள் வாய்ப்புக்கள் எல்லாம் இப்போது பள்ளிக்கூடங்களுக்கு வந்துவிட்டன.
போதிய கட்டிடங்கள், போதிய ஆசிரியர் வளம், ஆய்வுகூடங்கள், தொலைபேசி மற்றும் இணையக்கூடங்கள், சிமார்ட் வகுப்பறைகள் என மிகுந்த நவீனச் சூழலில் பள்ளிகள் இயங்குகின்றன.
போக்குவரத்து வசதிகள், கல்விக்கான நவீன வாய்ப்புக்கள் யாவும் அதிகரித்துவிட்டன. ஆனாலும் ஏன் பின்னடைவை சந்திக்கிறோம்?
கல்வியை நிர்வகித்த புலிகள்
போர்காலத்தில் இருந்த உயர்வை ஏன் எட்டமுடியவில்லை? பள்ளிக்கூடங்கள் வெறுமனே கட்டடங்களால் ஆனதல்ல! அப்படி கட்டடங்களாலும் வசதிகளினாலும் ஆனது என்றால் இப்போது வீழ்ச்சியும் அப்போது உயர்ச்சியையும் பெற்றிருக்க முடியாது.
அன்றைக்கு வடக்கு கிழக்கின் கல்வியை உயர்த்தியதில், தமிழீழ மாணவர் அமைப்பு, தமிழீழக் கல்விக் கழகத்தின் பங்களிப்பு பெரும் வகிபாகத்தை ஆற்றியது.
புலிகளின் நிர்வாகத்திறன் கல்வியை உயர்த்துவதில் பெரும் பங்கை வகித்தது. ஆசிரியர் வளமற்ற பள்ளிகளுக்கு புலிகளின் கல்விக் கழகம், ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்கியது.
ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் தேவையான விரிவுரைகளும் நடாத்தப்பட்டன. கடுமையான கண்காணிப்பும் பொறுப்பான கடமையாற்றலும் அன்று இருந்தது. கல்விச் சமூகம் கொள்ள வேண்டிய விழிப்பையும் கொண்டிருந்த பொறுப்பையும் சொல்லிக் கொடுத்து மிகுந்த விழிப்புடன் இருந்தது கல்விச் சமூகம்.
கல்விக்கு நிலவும் தடைகள்
தமிழர்கள் கல்வியால் ஈழத் தீவில் மாத்திரமின்றி உலகளவில் அறியப்பட்டவர்கள். ஈழத்தவர்கள் படித்த சமூகத்தினர் என்றே அறியப்பட்டனர்.
அவர்களின் கல்விமீது அரசாங்கம் அதிகாரபூர்வமாகவே தடைகளை பிரயோகித்து பின்தள்ள முயன்றது. அதிகாரபூர்வமற்ற ரீதியிலும் கல்விமீது போர் தொடுக்கப்பட்டது. இனப்பாகுபாடுகள் கல்வியில் இன்றளவில் தொடர்கின்றன.
எமது தேச விடுதலை கல்வியின் விடுதலையாகவும் அமையும். அதற்கு கல்விச் சமூகம் தகுந்த வழியில் கல்விப் பயணத்தை ஒரு போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். இன்றைக்கு கல்வியை குழப்பும் சூழல்தான் மிகுந்திருக்கிறது.
இராணுவச் சூழல், பள்ளிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரம், போரால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விப் பின்னடைவு, மற்றும் கல்வி இடைவிலகல், கவனத்தை குறைக்கும் கருவிகளின் ஆதிக்கம் என இன்றைக்கு கல்விக்கு உவப்பற்ற சூழல்தான் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்போரையும் வடக்கு கிழக்கு கல்விச் சமூகம் கடந்து தம் இனத்தின் வாழ்வை மீட்டெடுக்க வேண்டும். அதுவும் வடக்கு கிழக்கு இன்று சந்திதுள்ள பெரும் போராட்டம் எனலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 07 June, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.