சொந்த லாபங்களுக்காக பிரிந்து சின்னாபின்னமாகிய தமிழ் கட்சிகள் - எழுந்தது வலுவான கண்டனம்!
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிழக்கு மாகாண பெண்கள் சம்மேளன கூட்டம் இன்று மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. ஜேசுதாஸ் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இந்த நாட்டிலே மக்கள் பாரதூரமான பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். ஆட்சியாளர்களுடைய நேர்மையற்ற ஆட்சி முறையும், அடக்கு முறையும் மிகவும் மோசமான முறையிலே பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. சமூக பொருளாதார அரசியல் ரீதியாக இன்று இலங்கை மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபரை விரட்டிய இளைஞர்கள்
அடுத்த நேர உணவை பெற்றுக் கொள்வது எப்படி அதற்கு என்ன செய்யப் போகின்றோம் என்ற மக்கள் கூட்டத்தை இன்று இலங்கையிலே நாம் பார்க்கின்றோம். தொடர்ச்சியாக வறிய மக்களை வறியவர்களாக மாற்றுகின்ற பல நடவடிக்கைகள் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் நாட்டிலேயே கோட்டா கோ கம என்ற போராட்டத்தை நடத்தி முன்னாள் அதிபரை விரட்டினர்.
பின்பு நாடாளுமன்றத்திலுள்ள தங்களுக்கு ஆதரவானவர்களுடைய வாக்கில் வந்த அதிபர், இன்று அடக்கு முறையை அவிழ்த்து விட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். தென்னிலங்கையில் நடக்கின்ற போராட்டங்களாக இருக்கலாம் வடக்கில் நடக்கின்ற போராட்டங்களாக இருக்கலாம், நீரை , கண்ணீர் புகையை பயன்படுத்தி மக்களுடைய ஜனநாயக உரிமையை மறுக்கின்றதை தொடர்ச்சியாக நாம் பார்க்கின்றோம்.
பெரும்பான்மையினரையும் பாதித்த பயங்கரவாத சட்டம்
இன்று பலரை கைது செய்கின்றனர். வசந்த முதலிகே இந்த நாட்டினுடைய உரிமைக்காக போராடிய ஒரு சகோதரர், அவரை கைது செய்து 150 நாட்களுக்கு மேலாக இன்று தடுத்து வைத்துள்ளார்கள். ஆரம்பத்திலேயே தமிழர்களை சிறுபான்மையினத்தவரை கட்டுப்படுத்த கொண்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டம், பெரும்பான்மை மக்கள் அன்று அதை சாதகமாக ஏற்றுக் கொண்டார்கள்.
இன்று அதே பயங்கரவாத தடைச் சட்டம் இன்று அதே மக்களை பாதித்துள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்வது, போராட்டக்காரர்களை அடக்குவது ஒரு பாரதூரமான விடயமாகும். இன்று அனைத்து வகையிலும் மீனவர்கள், விவசாயிகள் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு இவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு சரியான தீர்வு இல்லை.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்ற வகையிலும் சிவில் அமைப்பு என்ற வகையிலும் அரசு உடனடியாக இவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் எனக்கேட்கின்றோம். தேர்தல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்திலே சூழ்ச்சிகளை ஏற்படுத்துகின்றனர். நேற்று இரவு நாம் மட்டக்களப்பில் இருந்தோம். மீண்டும் வரிசையில் நிற்கின்றதை பார்க்கின்றோம்.
மக்கள் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை
அவ்வாறு ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று சொல்லி இந்த தேர்தலை கால தாமதம் ஆக்கி மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை இன்று மேற்கொள்வதை பார்க்கின்றோம். இன்று தமிழ் கட்சிகளுக்கு இடையே பிழவு ஏற்பட்டு அவர்கள் ஒவ்வொரு கட்சிகளாக உடைந்துள்ளனர்.
மக்களுக்காக விடுதலை பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் மக்களுக்காக அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் என்று சொல்லுகின்ற தமிழ் கட்சிகள், இன்று சின்னாபின்னமாகி தங்களுடைய சொந்த லாபங்களுக்காக பிரிந்து செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
அதிபர் கூறினார் சுதந்திர தினத்திற்கு அரசியல் பிரச்சனைக்கான தீர்வுகளை வழங்குவேன் என்று, அந்த தீர்வுகள் என்ன அந்த தீர்வுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்று சொல்லி செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகள் இன்று பிரிந்து நின்று செயல்படுவதனால், அதிபர் வாக்குறுதியளித்தார்.
அது பொய்யாகவும் இருக்கலாம் ஆனால் அந்த வாக்குறுதியைக் கூட செயல்படுத்த முடியாத அளவு உள்ளோம். ஆகவே இந்த நேரத்திலே நாம் தமிழ் கட்சிகளுக்கு ஒரு அறைகூவல் விடுக்கின்றோம் இது ஒன்றிணைய கூடிய காலம் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு சிறிய தேர்தலாக இருக்கலாம் ஆனால் அதற்கு கூட விலை போகின்றவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.
ஆகவே இவைகளை நீங்கள் நிறுத்திக் கொண்டு இந்த மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேட வேண்டும். இந்த நாட்டிற்கு மலையக மக்கள் வந்து இருநூறு வருடங்களாகின்றன அவர்களுடைய பிரச்சனைகள் கூட இன்று வென்றெடுக்க முடியாத அளவு உள்ளது.
அப்படியான அரசியல்வாதிகளாக இருக்கின்றீர்கள். 200 வருடத்தினுள் சமூக கலாச்சார ஒடுக்கப்பட்ட அனாதைகளாக இருக்கின்றனர். அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதைப்பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.