ஏழைக்கு எழுத்தறிவிக்கும் சமுதாய சிற்பிகளின் தினம் இன்று!
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதியின் வரிகளை மெய்பித்து மாணவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் சேவையை கௌரவிக்கும் உலக ஆசிரியர் தினம் இன்றைய தினம் (06.10.2024) கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் சிபாரிசுக்கமைய ஒக்டோபர் மாதம் 05ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் (United Nations) உலக ஆசிரியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
1966ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு கற்பித்தல் கற்றல் தரநிலைகள் பற்றிய அளவுகோல்களை அமைக்க இது வழிவகுத்தது
ஆசிரியர் தினம்
1994ம் ஆண்டு முதல் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. பல நாடுகளில் ஒக்டோபர் 05ம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 6ம் திகதியே ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
‘கல்விக்கான புதிய சமூக ஒப்பந்தத்தை நோக்கி ஆசிரியர் குரல்களுக்கு மதிப்பளித்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உலகளவில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதென யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால், மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு.
மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது.
நாட்டின் எதிர்கால வளர்ச்சி
இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரைப் பெருமைப்படுத்துவதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார்.
ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவரும், மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது.
ஆசிரியரின் சிறப்பு
மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு.
உலக ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பைக் கொண்டாடும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும், இது எதிர்காலத்தை ஊக்குவிக்கும், மேம்படுத்தும் மற்றும் வடிவமைக்கிறது.
கல்வி என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மற்றும் நேர்மறையான மாற்றத்திற்கான சக்திவாய்ந்த சக்தி என்பதை நினைவூட்டுகிறது.
ஆசிரியர்களை கௌரவிப்பதன் மூலமும், தரமான கல்விக்காக வாதிடுவதன் மூலமும், அனைவருக்கும் பிரகாசமான மற்றும் சமமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
அறியாமை என்ற இருளில் இருந்து மாணவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நல்வழியை காண்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐபிசி தமிழ் செய்திப் பிரிவு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |