சம்பிக்க ரணவக்க மீதான வழக்கு அடுத்த ஆண்டு வரை நீடிப்பு
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ராஜகிரிய பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு(Champika Ranawaka) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(02.10.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இன்றைய வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிறி பண்டிதரத்ன, இந்த வழக்கின் விசாரணைகளை இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக வேறு திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பான வழக்கை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதியன்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |