ரணில் தொடர்பில் மொட்டு கட்சி எடுத்துள்ள உறுதியான தீர்மானம்
தொடர்ந்தும் அமைச்சர் பதவியை கோரி அதிபரை ஆத்திரமூட்ட வேண்டாம் என சிறி லங்கா பொதுஜன பெரமுன உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதிபர் அமைச்சுப் பதவியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் கட்சியின் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுன 10 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பல்வேறு காரணங்களுக்காக அமைச்சுப் பதவிகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஏமாற்றும் ரணில்
அமைச்சர் பதவியை வழங்கினால் கொடுங்கள், வழங்காவிட்டாலும் பிரச்சினையில்லை, எமது பணியைத் தொடர்வோம்,கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட ஆட்சியின் மிகுதி காலத்தை தொடரவே சிறி லங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சிறி லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதாக அதிபர் முதலில் அறிவித்ததாகக் கூறும் பேச்சாளர், சுதந்திர தின விழாவின் பின்னர் முதல் அமைச்சுப் பதவியை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மற்றுமொரு உள்நோக்கம்
எனினும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகை பெற்றுக் கொண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சிறி லங்கா பொதுஜன பெரமுனவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையின் பின்னணியில் மற்றுமொரு உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
