யாழ் - மானிப்பாயில் வீடுடைத்து திருட்டு! சந்தேக நபர் கைது (படங்கள்)
மானிப்பாயில் திருட்டு
யாழ் - மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிதாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து அங்கிருந்த சலவை இயந்திரம், வளிச்சீராக்கி (ஏசி) சிசிரிவி கமரா உள்ளிட்ட 6 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டன.
சந்தேக நபர் கைது
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவின் மானிப்பாய் காவல் நிலைய உத்தியோகத்தரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மானிப்பாய் ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திருட்டுப் போயிருந்த மின் உபகரணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

